சென்னை புழல் சிறையில் பார்வையாளர்கள் நேர்காணல் அறையை திறந்த அமைச்சர் ரகுபதி

சென்னை புழல் சிறையில் பார்வையாளர்கள் நேர்காணல் அறையை திறந்த அமைச்சர் ரகுபதி
X

புழல் மத்திய சிறையி் பார்வையாளர்கள் நேர் காணல் அறையை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

புழல் மத்திய சிறையில் வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் நேர்காணல் அறையை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

புழல் மத்திய சிறையில் மேம்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் நேர்காணல் அறையை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது எந்தவித சிறப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில் கூறினார்.


திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை ,தண்டனை, மகளிர் என மூன்று பிரிவுகளில் சுமார் 4000.க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை கைதிகள் தங்களது உறவினர்களை சிறைக்குள் சந்திப்பதற்கான பிரத்தியேக அறையும், வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களை சந்திப்பதற்கான பார்வையாளர் அறையை மேம்படுத்துமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. கைதிகளின் உறவினர்களும் வழக்கறிஞர்களும் கைதிகளை சந்திப்பதற்கு முந்தைய தினமே புழல் சிறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள பிரத்தியேக எண்ணில் முன்பதிவு செய்து கொண்டால் மறுநாள் அவர்களுக்கான நேரம் ஒதுக்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் கால விரயம் இன்றி பார்வையாளர்களும் வழக்கறிஞர்களும் சிறை கைதிகளை சந்திப்பதற்கான பிரத்தியேக ஏற்பாடுகள் தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புழல் மத்திய சிறையில் மேம்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் நேர்காணல் அறையை சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து புழல் சிறையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பார்வையாளர்கள் அறை மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாரம் இருமுறை, நாளொன்றுக்கு ஒரு கைதி 30.நிமிடங்கள் என்ற அடிப்படையில் 56பேர் 3ஷிப்ட் முறையில் ஒரே நாளில் 728 சிறைவாசிகள் தங்களது உறவினர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஒரே நேரத்தில் 50 வழக்கறிஞர்கள் தனிப்பட்ட முறையில் சிறைவாசிகளை சந்திப்பதற்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். இதற்கு முன்பாக வழக்கறிஞர்கள் மாலை 3 முதல் 5 மணி வரை மட்டுமே சிறை கைதிகளை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வார நாட்களில் காலை 11 முதல் மாலை 5 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 10 முதல் பகல் ஒரு மணி வரை மட்டுமே இருந்ததை தற்போது, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை என வழக்கறிஞர்களின் நேரத்திற்கு ஏற்ப கைதிகளை சந்தித்து பேசுவதற்கான பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


முன்கூட்டியே பதிவு செய்வதால் ஒதுக்கப்பட்ட நேரத்தில் சிறைவாசிகள் பார்வையாளர் அறைக்கு வரவழைக்கப்படுவதாகவும் இதனால் கால விரயம் தவிர்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் சிறைச்சாலைக்கு வரும் கைதிகளின் உறவினர்கள் வழக்கறிஞர்களுக்கு என பார்வையாளர் அறைகளில் கழிப்பறை வசதிகளும் முறையாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பிரத்தியேக பார்வையாளர் அறை என்பது தமிழக சிறைத்துறை வரலாற்று புதிய மயில் கல்லாக அமையும் எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சிறைவாசிகளுக்கு கடந்த ஆண்டு முதல் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தற்போது வரை சிறைக்குள் வழங்கும் உணவு குறித்து எந்த சிறைவாசியும் புகார் தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். பார்வையாளர்கள் வழக்கறிஞர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை நேரடியாக அழைத்துச் சென்று காண்பித்துள்ளதாகவும் இதில் எந்தவித ஒளிவு மறைவிற்கு இடமில்லை எனவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

சிறைக்குள் கைதிகளுக்கு பிரத்தியேகமாக தொழிற் பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட தொழில்பயிற்சி வேண்டும் என கைதிகள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அது குறித்து ஆய்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். கைதிகள் பார்வையாளர்கள் தொடர்பு கொள்வதற்காக செய்யப்பட்டுள்ள இன்டர்காம் தொலைபேசியில் சிறைத்துறை எந்தவித ஒட்டுக்கேட்பு செயலிலும் ஈடுபடவில்லை எனவும் அது குறித்து யாரேனும் சந்தேகம் தெரிவித்தால் அதனை ஆய்வு செய்வதற்கு அந்த இன்ட்ரகாம் தொலைபேசிகளை வழங்கவும் தயாராக இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போது மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்ட நடைமுறையே இவருக்கும் கடைபிடிக்கப்பட்டது எனவும், எந்தவிதமான சிறப்பு வசதிகளையும் கோரவில்லை எனவும், தனிப்பட்ட உணவையும் கேட்கவில்லை என்றும், சிறையில் கொடுக்கப்பட்ட உணவை தான் அவர் சாப்பிட்டார் என்றும், தனி அறை கேட்கவில்லை, சுகமாகவும் இருக்கவில்லை, சாதாரண சிறைவாசி போலவே இருந்தார் எனவும், அவருடன் சிறையில் இருந்தவர்களை கேட்டுப்பாருங்கள் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு