வடசென்னை அனல் மின் நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் மூன்றாம் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2நிலைகளில் உள்ள 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் 3வது நிலையின் கட்டுமான பணிகள் 8327 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்த அளவிலான நிலக்கரியை கொண்டு அதிகபட்ச மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் இந்த அனல்மின் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தார். கொதிகலன் குழாய் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் அமைச்சர் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அனல்மின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் அமைச்சரிடம் பவர்பாயிண்ட் மூலம் விரிவாக எடுத்துரைத்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அண்மையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் 3ஆம் நிலைய திட்டத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்தார்.
எந்தெந்த பிரிவுகளில் தொய்வு ஏற்பட்டு திட்டப் பணிகள் தாமதமாகிறது என்பது கண்டறியப்பட்டு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பணிகள் முடுக்கி விடப்பட்டு அக்டோபர் மாதத்திற்குள் திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி மாயம் தொடர்பாக அறிக்கையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது தெரிவித்தார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu