போலி பணி நியமன ஆணை, ஆறு மாத சம்பளம்: 51 பேரிடம் மோசடி செய்த பலே ஆசாமி கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வசந்தகுமார்
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் போலி அரசு வேலை பணி நியமன ஆணை அளித்து ஆறு மாதம் சம்பளம் கொடுத்து 51 பேரிடம் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். மேலும் நான்கு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 51 பேரிடம் சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, கொரோனா காலத்தில் சில அதிகாரிகளின் துணையோடு போலி பணி நியமன ஆணை வழங்கி, அவர்களுக்கு ஆட்சியர் அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் பணி வழங்கியும் அதற்காக ஆறு மாதங்கள் ஊதியம் கொடுத்தும் மோசடி செய்துள்ளனர்
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்
இதில் திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் கற்பக விநாயகர் மூன்றாவது குறுக்குத் தெருவை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் காக்களூர் பைபாஸ் சாலையில் வாடகைக்கு அறை எடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது
மேலும் அந்த 51 நபர்களை கொரோனா காலத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே வரும் நபர்கள் நுழைவாயிலில் கையெழுத்திட்டு உள்ளே வர வேண்டும் என்ற விதியை பயன்படுத்தி, ஆட்சியை அலுவலகத்தில் கையெழுத்திட்டு பணிபுரிகிறார் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளார்
இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த போலி முத்திரைகள், கணினி, லேப்டாப் உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளின் துணையோடு விருந்தினர் மாளிகை பராமரிப்பது தோட்ட வேலை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களுக்கு ஆறு மாதம் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது
இதை அடுத்து வசந்தகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சம்பவத்தில் மேலும் நான்கு பேர் மீது வழக்குப் பதியப்பட்டு தேடப்பட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu