மகாளய அமாவாசையையொட்டி வீரராகவபெருமாள் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
வீர ராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. (உள்படம்) தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் அமாவாசை தினத்தன்று பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவது உண்டு. அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தை மகாளய அமாவாசையாக பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பதாலும், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதால் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முன்னோர்களுக்கு கோயில் அருகில் உள்ள குளக்கரையை சுற்றி தர்ப்பணம் செய்தனர்.
அதே நேரத்தில் தீராத நோய்கள் தீரவும், தடைபட்ட திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் கோயில் குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை கரைத்தும் வீரராகவப் பெருமாளை தரிசித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். அதே நேரத்தில் உறவினர்கள் யாரேனும் சமீபத்தில் இறந்திருந்தால், இந்த வீரராகவர் கோயிலில் இரவு தங்கினால் புண்ணியம் கிடைக்கும் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் இங்கு இரவு நேரங்களில் கோயில் அருகே தங்கியும், வீரராகவரை தரிசித்துவிட்டு செல்கின்றனர். ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மாவட்ட எஸ்.பி., பா.சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சந்திரதாசன் தலைமையில் நகர ஆய்வாளர் பத்மஸ்ரீபபி மற்றும் 30 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்கவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu