சாலை அகலப்படுத்த நிலம் வழங்கிய ஐந்து விவசாயிகளுக்கு பாராட்டு
சாலை அகலப்படுத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நெய்வேலி ஏரிக்கரையில் இருந்து திருக்கண்டலம் மேட்டுத் தெரு வரையில் சாலையை அகலப்படுத்த நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு எம்.எல்.ஏ. கோவிந்தராஜன் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், நெய்வேலி ஏரிக்கரையில் இருந்து திருக்கண்டலம் ஊராட்சி மேட்டுதெரு வரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை 12 அடி அகலத்தில் இருந்து வந்தது. இதனால் இச்சாலையில் ஒரு வாகனம் செல்லும் போது எதிர் திசையில் மற்றொரு வாகனம் செல்ல இயலாத நிலை நீடித்து வந்தது.மேலும், இச்சாலை அகலம் குறைவாக இருந்ததால் இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்ட வண்ணம் இருந்தது.
எனவே,இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என திருக்கண்டலம் ஊராட்சி பொதுமக்கள் சுமார் 40 ஆண்டு காலமாக தமிழக முதல்வர்,மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.இது குறித்து கிராமசபை கூட்டத்திலும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.மேலும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் பார்வைக்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில்,ஒரு கிலோ மீட்டர் தூர சாலைக்கு கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் தலா மூன்று அடி சாலையை அகலப்படுத்த நிலம் தேவைப்பட்டது.அந்த நிலத்தின் உரிமையாளர்களும், விவசாயிகளுமான ராமச்சந்திரன்,ராஜேந்திரன்,சண்முகம்,வஜ்ரம்,ராஜா ஆகியோரிடம் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த சாலையை அகலப்படுத்துவதால் இந்த ஊராட்சியில் வசித்து வரும் சுமார் 4,000 பொதுமக்கள் பயன் பெறுவார்கள், வாகனங்கள் நெரிசல் இன்றி செல்ல முடியும், சாலை விபத்து தவிர்க்கப்படும், எதிர்காலத்தில் சுற்று வட்டார கிராமங்களின் வளர்ச்சிக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே பொது நலன் கருதி நீங்கள் சாலை அபிவிருத்தி பணிக்காக நிலம் தர வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.
இதனை ஏற்று சாலையை அகலப்படுத்த தேவையான நிலத்தை வழங்குவதாக மேற்கண்ட 5 விவசாயிகளும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒப்புதல் அளித்தனர்.எனவே,இந்த சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த சில தினங்களாக ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி தலா மூன்று அடி வீதம் விவசாய நிலத்தை வழங்கிய விவசாயிகளுக்கு எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன் சார்பில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சத்தியவேலு,ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் ஆகியோர் மேற்கண்ட அந்த மேலும் 5 விவசாயிகளின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்று சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் லிங்கதுரை, ஊராட்சி செயலர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu