தமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர்
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணாநதி நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வந்தடைந்தது. வினாடிக்கு 150 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாராமாக இருப்பது திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமாகும்.இந்த ஏரிக்கான நீர்வரத்து மழை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரமாகும். ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், ஏரிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாக உள்ளது.
வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் இன்றைய காலை நிலவரப்படி மொத்தக் கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் வெறும் 64 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது.இதேபோல் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் நீர் இருப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டுத் திட்டப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு நீர் திறந்து விட தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.ஆனால், அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறந்து விடுவதில் தாமதமானது.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கண்டலேறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 19-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் 500 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக 1,300 கன அடியாக உயர்த்தப்பட்டு நீர் திறக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் கண்டவேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இன்று காலை வந்தடைந்தது.
இதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், மற்றும் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் தமிழகம் மற்றும் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்தை 25.கிலோ மீட்டர் தூரம் பயணித்து இன்று இரவுக்குள் அல்லது நாளை காலை வந்து அடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu