ஒரே நாளில் இரு வேறு இடங்களில் 26 பவுன் நகை திருட்டு: மர்மப்பெண்ணின் வீடியோ வைரல்
திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கம் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் பதிவான சிசிடிவி காட்சி
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் போளிவாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவருக்கு ரஞ்சனி என்ற பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டு மணவாள நகர் பகுதியில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முகூர்த்தத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த மணமகளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தபோது நகைகளை கழட்டி வைத்திருந்தபோது மர்மப் பெண் ஒருவர் மணமகள் அறைக்குள் வந்துள்ளார்.
மணமகனின் வீட்டார் என நினைத்த அவர்கள் எதுவும் கண்டு கொள்ளாமல் மணமகளை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கழற்றி வைக்கப்பட்டிருந்த நகைகளில் ஆறு சவரன் நகைகளை மட்டும் தனது பையில் எடுத்து போட்டுக் கொண்டு சென்றுவிட்டாராம். மீண்டும் மணப்பெண்ணுக்கு நகைகளை அணிவிக்கும் போது நகை இல்லாதது தெரிய வந்தது.
இதை அடுத்து மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்மப் பெண் ஒருவர் கையில் பையுடன் பயந்தபடியே மண்டபத்திலிருந்து வெளியேறும் காட்சிகளைக் கொண்டு, மணப்பெண் ரஞ்சனியின் தந்தை சுப்பிரமணி மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் மண்டபத்திலிருந்து நகைகளை திருடிக் கொண்டு செல்லும் மர்மப் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதே போல் திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் 20 சவரன் நகைகளை மர்ம பெண் திருடிச் சென்றுள்ளார். இரு வேறு சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருப்பது ஒரே பெண்ணா அல்லது தனித்தனி ஆட்களா என்கிற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஒரே நாளில் திருமண மண்டபங்களில் 26 சவரன் நகை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 500க்கும் மேற்பட்ட காவலர்கள் சென்னைக்கு பணியிடம் மாறுதல் கேட்டுச் சென்ற நிலையில், தற்போது மீண்டும் 80க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ள தாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய காவலர்கள் இல்லாததால் பாதுகாப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu