ஓய்வு பெற்ற மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
பைல் படம்
பழவேற்காடு அரசு மருத்துவ மனையில் ஓய்வு பெற்ற மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்குவதற்காக 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற மருத்துவமனை ஊழியர் மற்றும் மருத்துவமனை உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் அடுத்த காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் சங்கர். பழவேற்காடு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களுக்கான சான்று வழங்கிட பழவேற்காடு மருத்துவ மனை ஊழியர் லோகேஷ் என்பவர் சுமார் ரூபாய் 1லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
உடல்நலம் சரியில்லாத தமது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக பணம் வேண்டும் என மருத்துவர் சங்கர் மன்றாடி கேட்டும் பணத்தை கொடுத்தால் மட்டுமே சான்று வழங்க முடியும் என லோகேஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையுற்ற மருத்துவர் சங்கர், லஞ்சம் கேட்டது தொடர்பாக திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் 30 ஆயிரத்தை பெற்றுக் கொண்ட மருத்துவர் சங்கர், பழவேற்காடு மருத்துவமனை ஊழியர் லோகேஷ் உதவியாளர் ரமேஷிடம் அந்த பணத்தாள்களை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரமேஷிடம் விசாரணை நடத்தியதில் மருத்துவமனை ஊழியர் லோகேஷிற்காக லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஊழியர் லோகேஷை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து 5 மணி நேரம் நடத்திய விசாரணையின் முடிவில், லஞ்சம் வாங்கி கொடுத்த மருத்துவமனை உதவியாளர் ரமேஷையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். லஞ்சம் பெறுவதற்கு முன்பாக ஓய்வு பெற்ற மருத்துவரிடம் மருத்துவமனை ஊழியர் லஞ்ச பணம் கேட்டு இருவர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu