வாங்கிய பணத்தை கொடுத்தும் கூடுதல் வட்டிக்கு தொல்லை: கூலித்தொழிலாளி தற்கொலை

வாங்கிய பணத்தை கொடுத்தும் கூடுதல் வட்டிக்கு தொல்லை: கூலித்தொழிலாளி தற்கொலை

பைல் படம்

வாங்கிய பணம் திருப்பி செலுத்தியும் கூடுதல் வட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததால் கூலித் தொழிலாளி விஷமருந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி வேலு (வயது 31).இவருக்கு திருமணமாகி மனைவி தங்கம்மா (வயது 25), மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் வேலு ஆரிக்கம்பேடு கிராமத்தை சேர்ந்த அறிவழகன் என்பவரின் பூந்தோட்டத்தில் பூ பறிக்கும் வேலை செய்து வருகின்றனர். வேலு அறிவழகன் இடம் கடந்த ஆண்டு குடும்ப செலவிற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விட்டு வேறு இடத்திற்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

தன்னிடம் வேலைக்கு வரவில்லை என்ற கோபத்தில் அறிவழகன் பலமுறை வேலு வீட்டிற்கு சென்று வாங்கிய பணத்திற்கு கூடுதலாக வட்டி கட்டுமாறு தொந்தரவு செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி அறிவழகன் வேலுவின் வீட்டிற்கு சென்று உடனடியாக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட வேண்டும், இல்லையென்றால் தன்னிடம் வேலைக்கு வருமாறு கூறி தொந்தரவு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அவரது மனைவி தங்கம்மாவை தகாத வார்த்தைகளால் பேசி குழந்தைகளை தூக்கி விடுவேன் என்று மிரட்டல் விட்ட நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான வேலு பூந்தோட்டத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வேலு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே உயிரிழந்த வேலுவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வேலுவின் உடலை வாங்க மறுத்து கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் இந்த அண்ணா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருவதாகவும், நாங்கள் அனைவரும் வயிற்று பிழைப்புக்காக சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பூந்தோட்டங்களில் பூ பறிப்பதற்கு காலை 6:00 மணிக்கு சென்றால் மாலை 4 மணிக்கு தான் வீடு திரும்பாதாகவும், இத்தனை மணி நேரம் வேலை செய்தாலும் அவர்கள் கொடுக்கும் சம்பளம் வெறும் 200 மட்டும்தான் என்றும். வேலைக்கு சேரும்போது முன்பணம் வாங்குவது வழக்கம், வாங்கும் பணத்தை வேலை நின்றபோது திருப்பி தருவது வழக்கம்.

ஆனால் வாங்கிய பணம் திருப்பிக் கொடுத்தாலும் வேறு எங்கும் வேலைக்கு செல்லக்கூடாது என்று மிரட்டல் விடுவதாகவும் தங்களிடம் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்ற கொத்தடுமையாக அவர்களை நடத்துவதாகவும், இது போன்ற நிலைமை இப்பகுதியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களிலும் நீடித்து வருவதாகவும், அப்பகுதி மக்களும் இறந்து போன வேலுவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் இருந்து போன வேலுவின் இறப்பிற்கு காரணமான அறிவழகனை உடனடியாக கைது செய்யவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags

Next Story