வங்கி கணக்கு காலாவதி ஆகிவிட்டதாக கூறி புழல் சிறை காவலரிடம் பணம் மோசடி

புழல் சிறை காவலரின் வங்கி கணக்கு காலாவதியாக உள்ளதால் பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றுமாறு குறுஞ்செய்தி அனுப்பி வங்கி கணக்கில் இருந்து 13700ரூபாயை சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை புழல் மத்திய விசாரணை சிறையில் காவலராக பணியாற்றி வரும் ஜெயசீலன் (34) அருகில் உள்ள சிறை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது செல்போனிற்கு குறுஞ்செய்தி மூலம் ஆன்லைன் இணைப்பு ஒன்று வந்துள்ளது. எஸ்.பி.ஐ. வங்கி கணக்கு காலாவதியாக உள்ளதாகவும், பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறைக்காவலர் ஜெயசீலன் குறுஞ்செய்தியில் வந்த இணைப்பை அழுத்தி விவரங்களை கொடுத்து தமக்கு வந்த ஓடிபி எண்ணை சிறைக்காவலர் ஜெயசீலன் பதிவிட்டுள்ளார். உடனடியாக வங்கி கணக்கில் ரூபாய் 13700 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறைக்காவலர் தமது பணத்தை மீட்டு தரும்படி 1930மூலமாகவும், புழல் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஐபிசி 420, 2008ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66டி என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி மற்றும் இணைய வழி குற்றம் என்பதால் குற்றப்பிரிவு மற்றும் சைபர் பிரிவு என அனைத்து பிரிவு போலீசாரும் மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சுற்றுவட்டார இடங்களில் தொடர்ந்து ஆன்லைனில் மோசடி செயல்களில் அரங்கேறி வருவது காவல்துறையினருக்கு தொல்லையாய் அமைந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu