சோழவரம் அருகே கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்பந்து போட்டி

Foot Ball Competition Prize Distributed
சோழவரம் அருகே கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம் பி தயாநிதி மாறன் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த பாடியநல்லூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் கால்பந்தாட்ட போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சன் முனியாண்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் மீ.வே.கர்ணாகரன் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இதில் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 8.அணிகள் கலந்து கொண்டன.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் செவ்வாய்பேட்டையை சேர்ந்த பிரண்ட்ஸ் புட்பால் கிளப் அணியும், சென்னையை சேர்ந்த ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்சைஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்சைஸ் அணி வீரர் நந்தகுமார் அட்டகாசமாக விளையாடி ஒரு கோல் அடித்தார்.ஆட்டத்தின் இறுதியில் ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்சைஸ் அணி 1-0 என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தயாநிதி மாறன் எம்.பி வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகை, கோப்பை, பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் இரண்டாம் இடம் பிடித்த அணி வீரர்களுக்கும், போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும் பரிசுகளும் வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தயாநிதி மாறன் விளையாட்டு போட்டிகளால் வெற்றி, தோல்விகளை சமமாக பார்க்கின்ற மனநிலை உருவாகும் என்பதால் வாழ்வில் உயர்வு வரும் என்றார். செல்போனில் மூழ்கியுள்ள இளைஞர்களை விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இதில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu