பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

பெரிய பாளையம் பவானி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரை பகுதியில் சுயம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் திருவிழா 14 வாருங்கள் வெகு விமர்சையாகவும் கோலாகலமாகவும் நடைபெறும். ஆடி திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தமிழக மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை பேருந்துகளிலும்,சொந்த வாகனங்களிலும் பெரியபாளையம் வந்து இரவு தங்கி இருந்து காலை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை முடிகாணிக்கை செலுத்தி, பொங்கல் மண்டபத்தில் வாடை பொங்கலிட்டு, ஆடு,கோழி என பலியிட்டு ஆலய வளாகத்தில் உள்ள வேப்பமர அடியில் அம்மனுக்கு படையல் இட்டு உடலில் வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து கையில் தேங்காய் ஏந்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும், சக்தி மண்டபம் எதிரே உள்ள சூலத்தில் பெண்கள் எலுமிச்சை பழம் மாலை செலுத்தி அதன் மீது மஞ்சள், குங்குமம் தூவியும் வழிபாடு செய்து இலவச தரிசனம் ரூபாய் 100 கட்டண தரிசனம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருவிழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை அன்று காலை 5 மணி முதல் 9 அளவில் கோவிலில் வாழை மர பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், மகா அபிஷேகமும், ஆலயத்தில் உள்ள ஸ்ரீ அற்புத விநாயகருக்கு108 பால்குட அபிஷேகமும், செய்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணி அளவில் உற்சவர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மூசிக வாகனத்தில் வைத்து திருவீதி உலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் மூலவர் சுயம்பு பவானி அம்மனுக்கு நவ கலச பூஜை, மூர்த்தி ஹோமம், நடைபெற்றது தொடர்ந்து மகா அபிஷேகமும், அலங்காரம் செய்து ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் பவானி அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன்,பன்னீர், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட நறுமண திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனையும் காண்பிக்கப்பட்டு கேடயத்தில் உள் பிரகார புறப்பாடும நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை சூரிய பிரபையில் உற்சவர் பவானி அம்மன் உமா மகேஸ்வரி அலங்காரத்தில் பெரியபாளையம் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழா காலங்களில் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் கோவில் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டும், பெரியபாளையம் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.


மேலும் விழா காலங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் கனரக வாகனங்களை வெங்கல்-சீதஞ்சேரி வழியாக திருப்பி விடப்பட்டன.

மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஆலயத்தின் சார்பில் ஏற்பாடுகளை மிக சிறப்பாக செய்திருந்தனர். திருவிழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story