புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றம்:கலெக்டர் ஆய்வு
புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை ஆய்வு செய்த கலெக்டர்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இன்று காலை 10 மணி நிலவரப்படி 2763 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 3070கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
10வது நாளாக புழல் ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் புழல் ஏரியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கனமழை பெய்யும் என்பதால் புழல் ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் பாதுகாப்பு கருதி ஏரியில் உபரிநீர் திறப்பு 100 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது. நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஆகிய 4 முக்கிய ஏரிகளை தொடர்ந்து 24 மணி நேரமும் ஏரிகளை கண்காணித்து வருவதாக தெரிவித்தார். முக்கிய ஏரிகளான புழல், சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் உறுதி தன்மையுடன் உள்ளது எனவும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் படிப்படியாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுத்து உபரிநீர் வெளியேற்றப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
உபரிநீர் வெளியேற்றத்தினால் அதிகாரிகள் தொடர்ந்து உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்களுக்கு அறிவுரை வழங்கி வருவதாக தெரிவித்தார். மாவட்டத்தில் 42 குழுக்கள் மழை நிலவரங்களை கண்காணித்து பணியாற்றி வருவதாக தெரிவித்தார். கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு ஆரணி ஆறு ஆகிய 3 ஆறுகளையும் கண்கானித்து வருவதாகவும், ஆந்திராவில் இருந்து ஆறுகளில் உபரிநீர் திறப்பது தொடர்பாக ஆந்திர அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்தாண்டு ஆரணியாற்றில் உடைப்பு சீரமைப்பு பணிகள் நடந்துள்ளதாகவும், கொசஸ்தலை ஆற்றில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்து 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடத்துள்ளதால் இந்தாண்டு அங்கெல்லாம் பாதிப்பு ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 044 - 27664177, 044 - 27666746, கட்டணமில்லா எண் 1077, வாட்சப் எண் 9444317862 ஆகிய எண்களில் மழை பாதிப்புகள் குறித்து தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என தெரிவித்தார்.
மழையை எதிர்கொள்ள மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க புயல் பாதுகாப்பு மையங்கள் 2, 600தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu