திருவள்ளூரில் மருந்து கடை உரிமையாளர்களுடன் டிஎஸ்பி ஆலோசனை

திருவள்ளூரில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ( டி.எஸ்.பி) திருவள்ளூர் டி.எஸ்.பி அழகேசன் தலைமையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மெடிக்கல் ஷாப் உரிமையாளர்களுடன் போதை மாத்திரைகள் விற்பனை தடுப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் திருவள்ளூர், திருவாலங்காடு, திருத்தணி, ஆர்.கே. பேட்டை,பள்ளிப்பட்டு, பொன்னேரி, மீஞ்சூர், மணவாள நகர்,ஒண்டி குப்பம், பூந்தமல்லி போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மருந்து கடைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை துவக்கி வைத்து திருவள்ளூர் டி.எஸ்.பி அழகேசன் கூறியதாவது:
தற்போது உள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் அதிக அளவில் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
போலீசாரும் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மருந்து கடைகளின் உரிமையாளர்கள், தங்களது கடைகளில் போதை மருந்து மற்றும் போதை மாத்திரைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் மற்றும் மருந்துகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு, மருந்து கடைகளின் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் மருந்து கடைகளில் பொது மக்களுக்கு ஊசி போடக்கூடாது. மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகளை கொடுக்கக் கூடாது. அவ்வாறு இளைஞர்கள் போதை மாத்திரைகளை பயன்படுத்துவதால் அதிக அளவு சாலை விபத்துகளும், கொலை, கொள்ளை சம்பவங்களும் சமுதாய சீர்கேடுகளும் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மருந்து கடைகளின் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த மருந்து கடைகளின் உரிமையாளர்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் ஸ்டாலின், ரவிக்குமார், வெற்றிச்செல்வன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மற்றும் மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu