முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் காலமானார்

முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் காலமானார்
X

முன்னாள் அமைச்சர் க.சுந்தரம்.

முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் பொன்னேரி அருகே மீஞ்சூரில் உடல் நலக்குறைவால் காலமானார்.

பொன்னேரி அருகே திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. கருணாநிதி அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக செயல்பட்டவர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் வசித்து வந்தவர் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் (76). இவர் கடந்த 1948 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தார். தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த க.சுந்தரம் அண்ணா, கலைஞரால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்தார்.

மீஞ்சூர் கிளைக்கழக செயலாளர், மீஞ்சூர் ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். 1984ல் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு இழந்த நிலையில் 1989ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

கருணாநிதி அமைச்சரைவையில் அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து 1991ல் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த க.சுந்தரம் 1996 சட்டமன்ற தேர்தலில் பொன்னேரி தொகுதியில் போட்டியிட்டு 2வது முறையாக எம்எல்ஏவாக வென்றார். அப்போது கருணாநிதி அமைச்சரவையில் பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் க.சுந்தரத்திற்கு பொறுப்புகளை வழங்கி கருணாநிதி அழகு பார்த்தார். கழக துணை பொது செயலாளர், உயர்மட்ட செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த க.சுந்தரம் தற்போது திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழு அணியின் மாநில தலைவராக இருந்து வந்தார்.

கடந்தாண்டு வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா விருது வழங்கி கவுரவித்தார். அண்மை காலமாக வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் தமது வீட்டிலேயே காலமானார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் மறைந்த க.சுந்தரத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வர வாய்ப்புகள் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் இறுதி சடங்குகள் நாளை மாலை நடத்தப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்திற்கு எழிலினி என்ற மனைவியும், செந்தில்குமார், தமிழ்உதயன், தமிழ்பிரியன் என்ற மகன்களும் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!