திருவள்ளூர் அருகே கணவனை சேர்த்து வைக்கக்கோரி பெண் தர்ணா

திருவள்ளூர் அருகே கணவனை சேர்த்து வைக்கக்கோரி பெண் தர்ணா
X

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட லட்சுமி.

திருவள்ளூர் அருகே கணவனை சேர்த்து வைக்கக்கோரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருவள்ளூரை மாவட்டம், மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் லட்சுமி(23).டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார்.

இவரும் வீட்டின் அருகே வசித்து வந்த சின்னராசு என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனால் இருவரும் நெருங்கி பழகினர்.

இந்தநிலையில் சின்னராசுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இதனை அறிந்த லட்சுமி, இதுபற்றி ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

காவல்துறையினர் சின்னராசுவிடம் விசாரணை நடத்திய போது லட்சுமியை திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து ஊத்துக்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி இருதரப்பு உறவினர்கள் முன்னிலையில் சின்னராசு- லட்சுமி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும் லட்சுமியை வீட்டுக்கு அழைத்து செல்வதாக சின்னராசு தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றார்.

ஊத்துக்கோட்டை பஜாரில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து மனைவி லட்சுமியை நடுரோட்டில் இறக்கி விட்டு சென்றுவிட்டார்.

திருமணமான நாளே கணவர் ஓட்டம் பிடித்ததால் லட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கணவரின் வீடும் பூட்டியே கிடக்கிறது. இதனால் செய்வது அறியாமல் திகைத்த லட்சுமி, இதுகுறித்து ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யிடம் புகார் செய்தார். ஆனால் இதுவரை சின்னராசு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி வெள்ளியன்று (பிப்-18) காலை காதல் கணவர் சின்னராசு வீட்டு முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

லட்சுமிக்கு ஆதரவாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இ.மோகனா, மாவட்ட பொருளாளர் ஏ. பத்மா, திருவள்ளூர் வட்ட செயலாளர் பெர்னா உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு முறை கருக்கலைப்பு செய்த சின்னராசு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட லட்சுமி-க்கு நீதி கிடைக்க வேண்டும். திருமணம் செய்து வீட்டிற்கு கூட அழைத்து செல்லாமல் நடு ரோட்டில் தவிக்க விட்டு, விட்டு சென்ற சின்னராசு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.மோகனா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் அராஜகம் – வடமாநில இளைஞர் மீது பொதுமக்கள் ஆத்திரம் - ஈரோட்டில் பரபரப்பு!