ஆடி முதல் வெள்ளி: பவானி அம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம்

ஆடி முதல் வெள்ளி: பவானி அம்மன் கோயிலில் திரளான பக்தர்கள்  அம்மனை தரிசனம்
X

பவானி அம்மன் கோயிலில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு படை எடுத்த பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபாடு.

இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடுவது மிகச் சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம்.அதுவும் அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் அம்மன் குளிர்ந்த மனதோடு இருப்பார் என்றும் பக்தர்கள் கேட்கும் வரங்களை கொடுப்பாள் என்று நம்பிக்கை உள்ளதால் இந்த நாட்களில் அனைத்து அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆடி வெள்ளி சிறப்பு வழிபாட்டில் பெண்கள் அதிக பக்தியுடன் பங்கேற்று தங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடுகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம்,பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரை பகுதியில் சுயம்புவாக எழுந்தருளியே புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத திருவிழா தொடர்ந்து 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறும்

இந்த கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழக மட்டுமல்லாமல் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வார்.


கடந்த 12ம் தேதி அன்று பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்த முடிவற்ற பின்னர். ஆடி மாதம் கடந்த 17ஆம் தேதி அன்று பிறந்ததையொட்டி அன்று பவானி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பவானி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே கோ பூஜை, மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகமும், மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் விசேஷ அலங்காரமும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கடக லக்னத்தில் பந்த கால் முகூர்த்தம் நடைபெற்றது.

முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பெரியபாளையம் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை,பொன்னேரி, செங்குன்றம் மற்றும் பெரியபாளையம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாலை எழுந்து புனித நீராடி மஞ்சள், மற்றும் சிவப்பு வண்ண ஆடைகளை அணிந்து கையில் வேப்பிலை ஏந்தி பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு நீண்ட தூரம் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள புற்றில் பாலை ஊற்றி நெய் விளக்கு தீபம் ஏற்றி வலம் வந்தனர்.பின்னர் சக்தி மண்டபம் எதிரே கற்பூர ஏற்றி கோவில் சுற்றி வலம் வந்தும் மூலவர் பவானி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

இக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானப் பிரசாதம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளை ஆலயத்தின் சார்பில் அறங்காவலர் அஞ்சன் லோக மித்ரா, மற்றும் செயல் அலுவலர் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!