பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ( முதல் படம்)
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் 4 ஆவது ஆடி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் பவானி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா தொடர்ந்து 14 வார காலம் விழா கோலம் போன்றிருக்கும் சுயம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவிலுக்கு. சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மட்டுமல்லாது ஆந்திரா, புதுச்சேரி,தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
சனிக்கிழமை அன்று சொந்த வாகனங்களிலும், பேருந்துகளிலும் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவிலுக்கு வந்து இரவு தங்கி ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் முடி காணிக்கை செலுத்தி ஆலய வளாகத்தில் உள்ள பொங்கல் மண்டபத்தில் வாடை பொங்கலிட்டு, ஆடு, கோழி என பலியிட்டு வழிபடுகின்றனர்.
வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து அம்மனுக்கு படையல் இட்டு பின்னர் கையில் தேங்காய் ஏந்தி கோவில் சுற்றி வலம் வந்து அங்கப்பிரதட்சணமும் செய்து ஆலய கோபுர எதிரில் உள்ள சக்தி மண்டபத்தில் கற்பூரம் ஏற்றி அங்குள்ள சூலத்திற்கு எலுமிச்சை மாலை அணிவித்து குங்குமம், மஞ்சள், பூக்களாலும் அர்ச்சனை செய்தும் நெய் தீபம் ஏற்றியும் வழிபாடு நடத்துவர்.
இலவச தரிசனம் ரூபாய் 100 கட்டண தரிசனம் க்யூ வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் ஆடி மாதம் 4.வாரம் ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நேற்று அதிகாலை பவானி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம்,இளநீர், ஜவ்வாது,தேன்,பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உற்சவர் பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மேல தாளங்கள் முழங்க ஆலய மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பால்வித்தார். மேலும் மாலை 4மணி அளவில் அம்மன் சிறப்பு அபிஷேகம் முடிந்த அம்மன் ஊஞ்சல் சேவையும், பின்னர் சிம்ஹா வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் பெரியபாளையம் முக்கிய வீதிகளில் உலா வந்தன.
இன்று பவானி அம்மனை கோவிலில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் காவல்துறை சார்பில் பெரியபாளையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கேமராக்களின் மூலம் கண்காணித்து வருகிறது. மேலும் இது குறித்து ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கையில்,
கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிகளுக்காக ரூபாய் 159 கோடி மதிப்பீட்டில் ஆலய வளாகத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி, அன்னதான கூடம், மொட்டை அடிக்கும் கட்டிடம், கழிப்பறை, குளியலறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் பணிகளை நடைபெற்று வருவதால் போதிய இடம் வசதி இல்லாத பக்தர்கள் தங்குவதற்கு அதிக கட்டணம் செலுத்தி தனியார் விடுதிகளில் தங்கி தங்குவதாகவும், தனியார் கழிப்பறைகளில் சென்று அதிக கட்டணம் செலுத்தி தேவைகளுக்கு சென்று வருவதாகவும், இதனால் வயதானவர்கள், பெண்கள்,குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், தற்காலிக ஆலய வளாகத்தில் குளியலறையும், கழிப்பறையும், குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும் எனவும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu