அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்த பக்தர்கள் கோரிக்கை.

அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்த பக்தர்கள் கோரிக்கை.

சிறுவாபுரி முருகன் கோவில் 

சிறுவாபுரி முருகன் கோவிலில் வழங்கப்படும் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ரூபாய் 1.கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த கோவிலில் தொடர்ச்சியாக 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

செவ்வாய்கிழமைகளில் சுமார் 30 ஆயிரம் முதல் நாற்பதாயிரம் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக காலை பத்து மணி முதல் மதியம் மூன்று மணிவரை சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

சாமி தரிசனம் செய்த பக்தர்கள் வயிறார அன்னதானம் சாப்பிடலாம் என அன்னதான கூடத்திற்கு சென்றால் அங்கு 200 பேருக்கு மட்டுமே அன்னதானம் தயார் செய்யப்பட்டதாகவும் அன்னதானம் முடிந்து விட்டதாக கோவில் ஊழியர்கள் கூறுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.செவ்வாய்கிழமைகளில் 200 பேருக்கு அன்னதானம் என்பது மிக மிக மிக குறைவான எண்ணிக்கையாகும், என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், உள்ளிட்ட தொலைதூரத்திலிருந்துதான் பெரும்பாலான பக்தர்கள் வருகின்றனர். மதிய நேரத்தில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் உணவருந்த முடியாமல் பட்டினியுடன் ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஊரில் சிறிய அளவில் ஒருசில உணவகங்களே உள்ளன. சொல்லி கொள்ளும்படி பெரிய அளவிலான உணவகங்களும் இங்கு இல்லை என பக்தர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு செவ்வாய்கிழமைகளில் மூவாயிரம் பேர் உணவருந்தும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரம் பேர் உணவருந்தும் வகையிலும் மற்ற நாட்களில் ஐநூறு பேர் உணவருந்தும் விதத்திலும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story