நடிகருக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: எர்ணாவூர் நாராயணன் பேட்டி
நடிகர்களுக்கு கூடும் கூட்டம் என்பது வாக்குகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை, பல ஆண்டுகள் சரத்குமாருடன் இருந்து பார்த்த அனுபவத்தில் கூறுகிறேன் என எர்ணாவூர் நாராயணன் தெரிவித்து உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்று கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். நேற்று விஜய் மாநாட்டில் திரண்ட கூட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட அதிக சம்பளம் வாங்கக்கூடிய உச்ச நடிகர் விஜய் எனவும், பொதுவாகவே நடிகர்களுக்கு ஆரம்பத்தில் இருக்கும் கூட்டம் படிப்படியாக குறைந்துவிடும் என்றார். நடிகர் என்ற மாயை காரணமாக கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுவது கிடையாது எனவும், வாக்குகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை எனவும், திருமங்கலம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ராதிகா அவர்கள் 20,000 ஆட்டோகிராப் போட்ட நிலையில் 800 வாக்குகள் மட்டுமே தங்களுக்கு கிடைத்தது எனவும் பல ஆண்டுகள் சரத்குமாருடன் இருந்து பார்த்த அனுபவத்தில் கூறுகிறேன் என எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.
நடிகர்களாக இருந்து கட்சி ஆரம்பித்து சிவாஜியாலும் அரசியலில் கால் ஊன்ற முடியவில்லை எனவும், விஜயகாந்த், கார்த்திக், கமலஹாசன் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர் என்றும் நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கும் போது கூட்டம் கூடுவது வாடிக்கை எனவும் வரும் தேர்தலில் மக்கள் வாக்களிக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.
விஜய்யை நேரடியாக பார்க்கலாம் என்று கூடிய ரசிகர்கள் கூட்டம் நேற்றைய கூட்டம் எனவும் இதுவரையில் மக்களுக்காக எதுவுமே செய்யாமல் இருந்த விஜய் தற்போது தான் மக்களிடம் வந்துள்ளார் என்றும், கண்ணாடி கூண்டில் இருப்பது போல மக்களிடம் இருந்து விலகி நிற்கும் போது நடிகர்களுக்கு கூடும் மக்கள் கூட்டம் என்பது, அரசியலுக்கு வந்த பிறகு மாயை போல் குறைந்து விடும் என்றார்.
கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து திராவிடம் என கூறியே திமுக தேர்தல்களை சந்தித்து வருகிறது எனவும், அனைவருக்கும் வீடு என விஜய் கூறி இருப்பது சாத்தியமற்றது எனவும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu