பொன்னேரி அருகே தனியார் தொழிற்சாலை முன் தொடர் உண்ணாவிரத போராட்டம்
பொன்னேரி அருகே தனியார் தொழிற்சாலை முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள்.
பொன்னேரி அருகே தனியார் தொழிற்சாலையில் சங்கம் அமைத்த 2தொழிலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் சக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த இருளிப்பட்டில் மீன் வலைகளுக்கு இழை தயாரிக்கும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களது உரிமைகளுக்காக அண்மையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் கிளையை தங்களது தொழிற்சாலையில் தொடங்கியுள்ளனர். தொழிலாளர்கள் தொழிற்சங்க கிளையை திறந்ததை கண்டித்து நிர்வாகம் தரப்பில் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் இரண்டு பேரை வேறு மாவட்டங்களில் உள்ள கிளைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் பல்வேறு வகைகளில் தொழிற்சங்கத்தை தொடங்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கடி தந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை கண்டிக்கும் விதமாக தொழிற்சாலை வாயில் முன்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக சக தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் இதே ஆலைக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும், தொழிலாளர் நலவிரோத போக்கை நிர்வாகம் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சகத் தொழிலாளர்கள் பேசுகையில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் இதே ஆலையில் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் நிர்வாகத்தை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu