குழந்தை திருமணத்தில் தொடர்பா? 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை: திருவள்ளூர் கலெக்டர்

குழந்தை திருமணத்தில் தொடர்பா? 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை: திருவள்ளூர் கலெக்டர்
X

திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா.

குழந்தை திருமணத்தில் தொடர்பு இருந்தால் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை (அ) ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா எச்சரித்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் குழந்தை திருமணம் தொடர்பாக அளித்த பேட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடந்து வருகிறது. அதாவது 18வயது நிறைவடையாத பெண் 21வயது நிறைவடையாத ஆண் திருமணம் நடந்தால் அது குழந்தை திருமணமாகும். மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 28 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளன.

குழந்தைத் திருமணம் செய்வதன் மூலம், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும், தாய்-சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ரத்த சோகை, உடல் மற்றும் மனம் பாதிப்படைவதால் பல நோய்கள் ஏற்படவும், படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வியறிவு தடைப்பட்டு, தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்பு உள்ளது.

திருமண தடைச்சட்டம் 2006ன் படி குழந்தைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதில் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது 1லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை நடத்தியவர் மற்றும் நடத்த தூண்டியவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், பதிப்பக உரிமையாளர், மந்திரம் ஓதுபவர், மண்டப உரிமையாளர் உட்பட அனைவரும் குற்றவாளிகள்.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச அழைப்பு எண் - 1098, பெண்கள் உதவி தொடர்பு எண் - 181, மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் - 044 29896049 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் தொலைபேசி எண் - 044 27665595 ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் குழந்தை திருமணம் இல்லா திருவள்ளூர் மாவட்டம் என்று உறுதி கூறுவோம் என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story