புழல் சிறையில் மறைத்து வைத்திருந்த செல்போன், கஞ்சா பறிமுதல்

புழல் சிறையில் மறைத்து வைத்திருந்த செல்போன், கஞ்சா பறிமுதல்
X

பைல் படம்

புழல் மத்திய சிறையில் ஒரே நாளில் கைதிகள் மறைத்து வைத்திருந்த 5செல்போன்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மணலி ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அகில்குமார் என்பவர் ஆர்.கே.நகர் காவல் நிலைய போதை பொருள் வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்காக கெல்லீஸ் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜராகி மீண்டும் சிறைக்கு திரும்பிய போது, அகில்குமாரை சிறை காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அகில்குமார் தம்முடைய காலணியில் சிறிய ரக செல்போன் மற்றும் கஞ்சா பொட்டலம் ஆகியவற்றை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து செல்போன், 30கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து அகில்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பலர் செல்போன் பயன்படுத்துவது தெரிய வந்தது. இதனையடுத்து சிறை காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் விசாரணை பிரிவில் கழிவறை, கைதிகளின் உடைகள் என பல இடங்களில் மறைத்து வைத்திருந்த 4செல்போன்கள், சிம்கார்டுகள், பேட்டரிகள், சார்ஜர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரே நாளில் புழல் சிறையில் 5செல்போன்கள், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்