கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயார் திருக்கல்யாணம்
கல்யாண வெங்கடேச பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் நடைபெற்ற திருக்கல்யாணம்
சோழவரம் அருகே கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆத்தூரில் கிராமத்தில் உள்ள அருள்மிகு அலர்மேலு மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோவிலில் புரட்டாசி இரண்டாவது வார திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு ஒன்பது வகையான பழங்களை கொண்டும் பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பட்டு உடைகளாலும், வண்ண மலர்களாலும், திரு ஆதாரங்களால் அலங்காரம் செய்தனர். பின்னர் பக்தர்கள் சார்பில் விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க சீர்வரிசை கொண்டு வந்தனர். ஆலய வளாகத்தில் பட்டாச்சாரியார்கள் அக்னி ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் முழங்க கல்யாண வெங்கடேச பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் மாலை மாற்றியும், பூ பந்து உருட்டியும், திரு நாண் கயிற்றை கட்டி வைத்து கெட்டி மேளம் முழங்க திருக்கல்யாண வைபோகத்தை வெகு விமரிசையாக நடத்தினர்.
இந்த நிகழ்வின் போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்தில் முழக்கமிட்டனர். திருக்கல்யாண வைபோகத்திற்கு பிறகு மாப்பிள்ளை கல்யாண வெங்கடேச பெருமாளுக்கும் மணப்பெண்கள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் பட்டாச்சாரியார்கள் தீப தூப ஆராதனைகள் காண்பித்தனர்.
இந்தத் திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருக்கல்யாண தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். இவ்விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண வைபோகத்தை கண்டு களித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu