ஊத்துக்கோட்டை அருகே தமிழக, ஆந்திரா எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்

ஊத்துக்கோட்டை அருகே நிறுத்தப்பட்ட பஸ்கள்.
ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டது. எதிரொலியாக தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு செல்லக்கூடிய பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஆந்திர மாநில முதலமைச்சராக 2014-2019 ஆண்டு காலத்தில் சந்திரபாபு நாயுடு செயல்பட்டபோது கிராமப்புறங்களில் வேலை இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தில் ரூ 371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றப் புலனாய் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை 6 மணியளவில் ஆந்திரா மாநிலம் நந்தியலாவில் அவரை குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஆந்திரா தெலுங்கானா மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர். பல இடங்களில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இதன் காரணமாக பாதுகாப்பு கருதி தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் தமிழக எல்லையில் காலை 6 மணியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இருந்து ஆந்திரா செல்லக்கூடிய 20 க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்திலேயே காலை 6 மணி அளவில் நிறுத்தப்பட்டன. இதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது.
தமிழக பகுதியில் இருந்து சுமார் 300 பேருந்துகள் ஆந்திராவுக்கு இயக்கப்பட்டு வருவதால் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பேருந்துகளும் இயக்கலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் வாய்மொழி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu