பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்ட நிர்வாகி
ஆரணியில் போதை பொருளுக்கு எதிராக நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டம்.
பாஜக ஆர்ப்பாட்ட மேடையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த நிர்வாகியால் கட்சியினர் மத்தியில் ஏற்பட்ட சிரிப்பலை அடங்க நீண்ட நேரம் ஆனது. அவர் நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்ததால் பழக்க தோஷத்தில் பேசிவிட்டதாக மன்னிப்பு கோரியதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியில் பாஜக சார்பில் போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டித்தும், தடுக்க தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அத்திப்பட்டு துரைக்கண்ணு என்பவர் கண்டன உரையாற்றினார். பாஜகவின் சாதனைகள் என சில திட்டங்கள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய அத்திப்பட்டு துரைக்கண்ணு இதுபோன்ற திட்டங்களை செய்திருக்கின்ற மோடி அரசுக்கு வருகிற தேர்தலில் "கை" சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பேசினார்.
பாஜக ஆர்ப்பாட்ட மேடையில் நின்றபடி காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் சிறிது நேரம் சலசலப்பும், சிரிப்பலையும் எழுந்தது. உடனே சுதாரித்த அத்திப்பட்டு துரைக்கண்ணு நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் பழக்க தோஷத்தில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுங்கள் எனவும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார். பாஜக மேடையில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்ட அத்திப்பட்டு துரைக்கண்ணு அதனை தொடர்ந்து பேசும் போது அருகில் நின்றிருந்த பாஜக நிர்வாகிகள் தாமரை சின்னம் என பேசுமாறு எடுத்து கொடுத்தனர். பாஜக மேடையில் மோடி அரசுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu