ஊத்துக்கோட்டை அருகே ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்: பொதுமக்கள் சாலை மறியல்

கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதையும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையும் காணலாம்.
ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பணியை தடுத்து நிறுத்தி தட்டிக் கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே சூளை மேனி ஊராட்சி கருமாரியம்மன் கோவில் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் மெய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை கிராமத்தை சேர்ந்த சிலர் 20.ஆண்டுகளுக்கு மேலாகவே ஆக்கிரமிப்பு செய்து பயிரிட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த 40ஏக்கர் நிலங்களை ஊராட்சி சார்பில் மீட்கப்பட்டு அங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது.
இந்த ஆக்கிரமிப்பு இடத்தில் சங்கீதம் என்பவர் சுமார் 5 ஏக்கருக்கு மேலாகவே நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊராட்சி சார்பில் சுமார் ஓராண்டு காலமாக 100 நாள் வேலை அந்த இடத்தில் நடைபெற்று வருகிறது இதனையடுத்து தற்போது 100 நாள் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த இடத்திற்கு சங்கீதம் என்பவர் வந்து 100 நாள் பணியை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டார். இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, அவரது கணவர் காளிதாஸ், மற்றும் ஊராட்சி செயலர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கீதத்திடம் பேசிக் கொண்டிருந்தபோது. ஆத்திரமடைந்த சங்கீதம் நிலத்தை பல ஆண்டுகளாக தான் விவசாயம் செய்து வருவதாகவும் நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் பேசிக் கொண்டிருந்தபோது ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி, மற்றும் அவரது கணவர் காளிதாசவை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கியுள்ளார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் காளிதாஸ் காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் தாக்கியதை கண்டித்து திருப்பதி - சென்னை சூளைமேனி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை டி. எஸ்.பி. கணேஷ்குமார் மற்றும் ஆய்வாளர் சத்தியபாமா, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது ஊராட்சி மன்ற தலைவர் அவரது கணவரை தாக்கிய சங்கீதத்தை கைது செய்ய வலியுறுத்தினார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து உடனடியாக சங்கீதத்தை கைது செய்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருப்பதி-சென்னை இடையேயான சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu