வீடு புகுந்து மேலாளர் மீது தாக்குதல்- 3 பேர் கைது
திருவள்ளூரை அடுத்த பெரிய குப்பத்தில் திருமண மண்டபத்தை பதிவு செய்வதற்காக 1 லட்ச ரூபாய் கேட்டதால் வீடு தேடி சென்று மேலாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் நகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரிய குப்பத்தை சேர்ந்த சாமிநாதன் (51) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 27 ம் தேதி அன்று காலை 11.30 மணியளவில், மணவாள நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (31), தெய்வசிகாமணி (58) , பாரதி (32 ) ஆகிய 3 பேர் திருமண மண்டபத்தை பதிவு செய்வதற்காக 10,000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். அதற்கு மேலாளர் சாமிநாதன் 1 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டும் தான் பதிவு செய்ய முடியும் என கூறியதால் ஆத்திரமடைந்த பாலாஜி, தெய்வசிகமணி, மற்றும் பாரதி ஆகியோர் நேராக பெரிய குப்பத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்று அவரது வீட்டு வாசலில் பதித்திருந்த கல்வெட்டை பெயர்த்து எடுத்ததுடன், சாமிநாதனையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சாமிநாதன், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட பாலாஜி, தெய்வசிகாமணி, மற்றும் பாரதி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu