அரிக்கொம்பன் யானைக்கு உடலில் காயம்: வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அடர்வன காடுகள் திட்டத்தில் நடவு பணிகள் மேற்கொண்டார்.
அரிக்கொம்பன் யானைக்கு உடலில் காயங்கள் இருப்பதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புழுதிவாக்கம் பகுதியில் சதுப்பு நில பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரமிப்புமிக்க அலையாத்தி காடுகள் மீட்டுருவாக்குதல் திட்டத்தின் கீழ் அலையாத்தி மரக்கன்றுகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நடவு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன் ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் எண்ணூர் சதுப்புநில பகுதியில் அலையாத்தி காடுகள் உருவாக்கும் முயற்சியாக மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஏற்கனவே உள்ள காடுகள் அழிந்து வருவதால் தான் தற்போது மீண்டும் காடுகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 22%உள்ள வனப்பரப்பை 33%உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொண்டு வருவதாக கூறிய அமைச்சர் காப்பு காடு திட்டத்தில் பெரும்பாலும் தைல மரங்கள் மட்டுமே நடவு செய்வது குறித்த கேள்விக்கு கால சூழ்நிலைக்கு ஏற்ப மர வகைகள் தேர்வு செய்யப்படுவதாகவும், இடங்களுக்கு ஏற்ப மரங்களை நட்டு தமிழ்நாட்டை பசுமையாக்குவோம் என தெரிவித்தார்.
1000க்கும் மேற்பட்ட இடங்களில் தாழ்வாக உள்ள மின் கம்பிகள், சாய்ந்து கிடந்த மின் கம்பிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையும், மின்துறையும் இணைந்து மேற்கொண்டு யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகாத வகையில் நடவடிக்கை எடுத்து முன் ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறினார்.
யானைகளுக்கு வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்தார்.
அரிசி கொம்பன் யானை சிறுசிறு காயங்களுடன் இருப்பதாகவும், அவற்றிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, அதற்கு உகந்த இடம் ஆய்வு செய்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறினார். தடை செய்யப்பட்ட பூச்சி வகைகளை கடத்துவதை தடுக்க அனைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். வனப்பகுதியில் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், கடல் சார்ந்த குற்றங்களை தடுக்கவும் அனைத்து சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வனப்பரப்பை அதிகரிக்க பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். இதனிடையே தொடர்ந்து அடுத்தடுத்து வனத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால் உடனிருந்த திருவள்ளூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் காந்தி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே தமது துறையை குறித்து தெளிவாக அனைத்து பதில்களையும் அமைச்சர் கூறிய நிலையில் 2ஆண்டுகளாக தொடர்ந்து பணிகள் மேற்கொண்டு வரும் எங்களையே துருவி துருவி கேள்வி கேட்கிறீர்களே, கடந்த 10ஆண்டுகளாக எந்த பணியையும் செய்யாதவர்களிடம் கேள்வி கேட்பீர்களா என கூறி செய்தியாளர் சந்திப்பதை முடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல் பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu