மழை நீர் வீட்டை சூழ்ந்ததால் அடிப்படை வசதிகள் இன்றி ஆடுகளுடன் வாழும் மூதாட்டி

மழை நீர் வீட்டை சூழ்ந்துள்ளதால் சிரமத்தில் வாழும் மூதாட்டி.
பொன்னேரி அருகே வாழ்வதற்காக போராடும் மூதாட்டி மழைநீர் சூழ்ந்துள்ளதால் ஆடுகள் மற்றும் விஷ ஜந்துகளுடனும் படுத்து உறங்கும் அவல நிலை உள்ளது. தனக்கு வீடு கட்டி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அந்த மூதாட்டி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் ஊராட்சியில் வஞ்சிவாக்கம் கூட்டுரோடு எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் மூதாட்டி பேபியம்மாள்(வயது65). பேபியம்மாள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.சாலை அமைக்கும் பணிக்காக அரசு சார்பில் பேபியம்மாள் வசித்து வந்த வீடு இடித்து அகற்றப்பட்டு மாற்று இடமாக வஞ்சிவாக்கம் கூட்டுரோடு அருகில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் இடம் ஒதுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டார்.
வடகிழக்கு பருவமழையின் போது மழை நீர் தேங்கக் கூடிய பகுதியில் இடம் கொடுத்ததால் வீடு கட்டிய நாளிலிருந்து மழை நீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக வீடு மாறி விஷ ஜந்துகள் அவ்வப்போது கடித்து மூதாட்டி பெரும் அவதிக்கு ஆளாகி வந்துள்ளார். இதுகுறித்து பலமுறை அரசுத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மூன்றாண்டுகளாகியும் பிரதான சாலையில் இருந்து கிராம சாலைக்கு வந்து வீட்டிற்கு செல்வதற்கு வழி இல்லாமல் வயதான காலத்தில் முற்புதர் வழியாகவே நடந்து செல்கிறார். அருகாமையில் கட்டி உள்ள பொது கழிப்பறையும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பயன்பாட்டிற்கு இல்லாமல் காலை கடன்களை முடிப்பதற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகிறார். குடிநீர் இணைப்பு வழங்கப்படாததால் வீட்டு அருகிலேயே கிணறு தோண்டி தண்ணீரை பயன்படுத்திவரும் மூதாட்டிக்கு மழை காலங்களில் கிணறும் குளமாக மாறுவதால் அதை பயன்படுத்த முடியாமல் தண்ணீருக்கும் வழி இல்லாமல் உள்ளார்.
வீட்டில் ஆடுகள் வளர்ப்பதால் மழைக்காலங்களில் வீட்டிலும் வீட்டை சுற்றிலும் தண்ணீர் சூழும்போது தான் படுத்திருக்கும் கட்டிலை ஆடுகளை காப்பாற்றுவதற்காக பங்கிட்டு ஆடுகளுடன் படுத்து உறங்குகிறார். சில நேரத்தில் அந்த ஆடுகளும் சிறுநீர் மற்றும் கழிவுகளை படுக்கையிலே போட்டு விடுவதால் அதிலேயே படுத்து உறங்கும் நிலைக்கு மூதாட்டி தள்ளப்பட்டுள்ளார்.
பல மணி நேரம் போராடி சமையல் செய்து தனக்கும் ஆடுகளுக்கும் உணவை பங்கிட்டு சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். வீடு முழுவதும் மழை நீர் சூழ்ந்து பாதங்கள் தண்ணீரிலேயே இருப்பதால் கால்களில் சேத்து புண்கள் ஏற்பட்டு நடப்பதற்கு கூட சிரமப்பட்டு தட்டு தடுமாறி விழுந்து வாழ்வதற்கு போராடுவதால் அரசு சார்பில் தொகுப்பு வீடு கட்டி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்என மூதாட்டி பேபியம்மாள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu