பள்ளி கட்டிடத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்து 20 குழந்தைகள் காயம்
பள்ளி கூரை மீது மரம் முறிந்து விழுந்ததில் காயம் அடைந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருவள்ளூர் அருகே சிறுவானூர் கண்டிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள அரச மரக்கிளை உடைந்து பழைய பள்ளி மேற்கூரை மீது விழுந்து விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள்: காயம் அடைந்தனர்.8 குழந்தைகளுக்கு தலையில் தையல் போடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் சிறுவானூர் கண்டிகையில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த தொடக்கப்பள்ளியில் சுமார் 35.பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மதிய உணவு சாப்பிடுவதற்காக பழைய கட்டிடம் அருகே 30 மாணவர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.அந்த கட்டிடம் தற்போது சமையல் கூடமாக செயல்பட்டு வருகின்ற நிலையில் பள்ளி வளாகம் அருகே உள்ள அரச மரக்கிளை முறிந்து பழைய கட்டிடத்தின் மேற்கூரை மீது விழுந்தது.
இதில் சிதறிய ஓடுகள் கீழே சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்தவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெயஸ்ரீ , நிஷா,தன்ஷிகா,சந்தனா, கோபிகா ஸ்ரீ,யாமினி, பிரியா உட்பட 8.பேருக்கு தலையில் தையல் போடப்பட்டது. கை,கால்,தலையில் அடிபட்ட மாணவர்களுக்கு சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது.மேலும் மற்றும் மருத்துவமனையில் உள்ள எலும்பு மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து மருத்துவமனையில் மாணவர்களின் பெற்றோர்கள் குவிந்தனர். குழந்தைகள் தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருவதை கண்ட பெற்றோர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்துணவு ஊழியர் சுகுணாவுக்கும் இலேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த சமுதாயத்திற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு ஷங்கர், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன்,ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு காயப்பட்ட மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி மாணவர்களுக்கு அழைக்கப்பட்ட சிகிச்சைகளை குறித்து கேட்டறிந்தார். சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu