கோவில் தீ மிதி விழாவில் குழந்தையுடன் தீ குண்டத்தில் விழுந்த தாத்தா

தீ குண்டத்தில் பேத்தியுடன் விழுந்த தாத்தா.
ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் குழந்தையுடன் தீமிதித்த முதியவர் தீயில் குழந்தையுடன் விழுந்து காயம் அடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை தாராட்சி கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த கோவில் தீமிதி திருவிழா காப்பு கட்டிக் கொடியேற்றத்துடன் கடந்த 21ஆம் தேதி அன்று துவங்கியது. பின்னர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்தல், கூழ்வார்த்தல், நிகழ்ச்சியை தொடர்ந்து பகாசுரன் வதம், அர்ஜுனன் திரௌபதி திருக்கல்யாணம், துயில் உரிதல், அர்ஜுனன் தபசு, தர்மராஜா ஊர்வலம், மாடு பிடித்தல், படுகளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது, நிகழ்ச்சி துவங்கிய நாள் முதல் நாள் தோறும் அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், தேன், ஜவ்வாது, பன்னீர், 108 குங்கும அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பல்வேறு கோலங்களில் நாள்தோறும் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கடைசி நாளான நேற்று கிராம எல்லையில் காப்பு கட்டி விரதம் இருந்து 110 பக்தர்கள் புனித நீராடி உடல் முழுவதும் மஞ்சள் பூசி பூச்சூடி தீ மிதிக்க காத்திருந்தனர், அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வாகனத்தில் சென்று பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தீ மிதித்தனர்.
இந்த விழாவில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (50) என்பவர் தனது 11/2 வயதுடைய பேத்தியை கையில் தூக்கிக்கொண்டு தீ மிதிக்க தீகுண்டத்தில் இறங்கினார். அப்போது தீகுண்டத்தில் குழந்தையுடன் நடந்து சென்ற போது திடீரென தடுமாற்றம் ஏற்பட்டு குழந்தையுடன் தீ குண்டத்தில் தவறி விழுந்தார். இதை கவனித்துக் கொண்டிருந்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டனர்.
இதில் ராஜேஷ் என்பவருக்கு இரண்டு கால்களிலும் உடலிலும் தீக்காயமும் குழந்தைக்கு முதுகு, கால், கை ஆகிய பகுதிகளில் தீக்காயமும் ஏற்பட்டது. உடனடியாக இவர்களை ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் குழந்தையை சென்னை குழந்தைகளின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu