திருவள்ளூர் அருகே அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்து 6 வயது சிறுவன் காயம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மற்றும் இடிந்த வீடு.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருப்பாச்சூர் கிராமத்தில் 75 அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. அந்த வீடுகள் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வீட்டின் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது.
இங்குள்ள 75 வீடுகளில் பெரும்பாலான கட்டடங்கள் முற்றிலும் சிதிலமடைந்து குடியிருக்கத் தகுதியற்றவையாக மாறியுள்ளது. எனவே இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள அணைத்து வீடுகளையும் சீரமைத்துத் தரும்படி இங்குள்ள பொதுமக்கள் கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் .
இந்தநிலையில் இதில் ஒரு வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மோகன்ராஜ் (வ/33) அவரது மனைவி சுபத்ரா (வ/ 26), மகள் சாதனா (வ/10), மகன்கள் நித்தீஷ்குமார் (வ/8), சூர்யா (வ/6) ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். இன்று அதிகாலையில் வழக்கம்போல் சுபத்ரா தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் நித்தீஷ்குமார், சூர்யா, தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று தொகுப்பு வீட்டின் மேல் கூறை இடிந்து தூங்கிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்ததுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த 6 வயது சூர்யாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 40 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளைச் சரி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்துவந்த போதிலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சுவர் இடிந்துவிழுந்த படுகாயமடைந்த சிறுவன் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளை உடனடியாக செய்யக்கோரியும், பழைய வீட்டுக் கட்டடங்களைப் புதுப்பித்துத் தரக் கோரியும் கோரிக்கை வைத்துள்ளனர். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 6 வயது சிறுவன் மீது வீட்டின் மேல் கூறை இடிந்து விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu