புழல் சிறையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் 12 கைதிகள் விடுதலை
புழல் மத்திய சிறை. பைல் படம்.
முன்னாள் முதலமைச்சர் மறைந்த அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதேபோல், 75வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளில் விடுதலை செய்வதற்கு தகுதியானவர்களை அடையாளம் காண விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்யவும், பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை பெற தகுதியற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்விடுதலையாகும் கைதிகளின் விவரங்களை சிறைத்துறை டி.ஜி.பி. உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் கைதிகளை முன்விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து மாநிலம் முழுவதும் 9 மத்திய சிறைகளில் இருந்து தேர்வான கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புழல் மத்திய சிறையில் இருந்து 12கைதிகள் இன்று காலை முன் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனை சிறையில் 10ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு மளிகை தொகுப்பு பொருட்கள், சிறையில் பணியாற்றியதற்கான ஊதியம் வழங்கப்பட்டது. முன்விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்ட பிற கைதிகள் வரும் நாட்களில் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu