ரவுடிகளாக மாற 2 வாலிபர்களை கத்தியால் குத்திய 4 பேர் கைது

பெரிய ரவுடிகளாக வரவேண்டும் என்பதற்காகவே திருவள்ளூர் களியனூரில் 2 வாலிபர்களை கத்தியால் குத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அருகே உள்ள ராஜ பத்மநாபபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத் மற்றும் விஜயகுமார். இவர்கள் இருவரும் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு பணி முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இரவு 10 மணி அளவில் களியனூர் பகுதியில் சுனில், சோனால், சூர்யா, பகவதி ஆகிய 4 பேர் சாலையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வினோத் மற்றும் விஜயகுமார் ஆகியோர் ஹாரன் அடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மது போதையில் இருந்த 4பேரும் கையில் வைத்திருந்த கத்தியால் வினோத் மற்றும் விஜயகுமாரை குத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர்களை பொதுமக்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி துரைப்பாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து, கத்தியால் குத்திய 4 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது தலைமறைவாக இருந்த களியனூரை சேர்ந்த சூர்யா (21), ஏகாட்டூரை சேர்ந்த சோனால், வாக்குபேட்டையை சேர்ந்த சதீஷ், கடம்பத்தூர் பகவதி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.. மேலும் விசாரணையில் 4 பெரும் பெரிய ரவுடிகள் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!