செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால், போலீசார் குவிக்கப்பட்டனர்.
குருவாயல் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் கிராமத்தில் தனி நபர் ஒருவர் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.இதனை அறிந்த இக்கிராமத்தைச் சேர்ந்த சிலர் அப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும்,இப்பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக வன்னியர் வாழ்வுரிமை சங்க நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோ.இரவிராஜ் கலந்து கொண்டார்.இதில், இச்சங்கத்தைச் சேர்ந்த திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் லயன்.கே.என்.தாஸ், திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர் கே.தீபக்,திருவள்ளூர் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் பி.சம்பத்,ஒன்றிய தலைவர் பி.கோகுல்,எல்லாபுரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பி.நிஷாந்த், எல்லாபுரம் ஒன்றிய துணைத் தலைவர் எஸ்.கமல், குருவாயல் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்டம்மாள், துணைத் தலைவர் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி,சங்க நிர்வாகிகள் ருக்குமநாதன்,மூர்த்தி,பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.மேலும், வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
மேலும், செல்போன் கோபுரம் அமைப்பது குறித்த சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் செவ்வாய்க்கிழமை 13-ம் தேதி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் கூறினர்.எனவே, அதுவரையில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.இப் பிரச்சினையால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu