சாலை விரிவாக்க பணிகளுக்காக விநாயகர் கோவில் அகற்றத்தை கண்டித்து போராட்டம்
தாமரைப்பாக்கம் அருகே பழமையான விநாயகர் கோவிலை அகற்றிவிட்டு நடைபெற்ற சாலை விரிவாக்க பணிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வணிகர்கள் கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் அம்மணம்பாக்கம் கூட்டு சாலையில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் திருநின்றையூர்- பெரியபாளையம் இடையில் ஆன சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோவிலின் வலது புறம் 80 அடியும், இடது புறம் 80 அடியும் காலியிடம் உள்ள நிலையில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கோடு திருவள்ளூர் சாலையில் அமைந்துள்ள இந்த கோவிலை இடித்து விட்டு சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரிவாக்க பணிக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத விநாயகர் கோவிலை இடிப்பதற்கான அவசியம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.இதற்கு அதிகாரிகள் தரப்பில் முறையான பதில் அளிக்காமல் கோவிலை அகற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருவதைத் தொடர்ந்து பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும் சாலை விரிவாக்க பணியை மாற்று பாதையில் செயல்படுத்த வலியுறுத்தியும் தனியார் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தாமரைப்பாக்கம் பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதி வணிகர்களும் கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக கோவிலை இடிக்கும் நடவடிக்கையை கைவிடாவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu