பூந்தமல்லி: மலையாள பிக்பாஸ் செட்டில் 6 ஊழியர்களுக்கு கொரோனா
தனியார் தொலைக்காட்சி சார்பில் தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதையடுத்து தெலுங்கு, மலையாளத்திலும் பிக்பாஸ் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்தது.
மலையாளத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கினார். கொரோனா காலம் என்பதால் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிகர்-நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வாரத்தில் புதன் கிழமை தோறும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த வாரம் புதன்கிழமை அன்று ஊழியர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்ததில் இன்றைய தினம் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்கள் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தாகவும், இதனால் 2 வாரங்களுக்கு மலையாளத்தில் நடத்தப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள பிக்பாஸ் செட்டில் 6 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu