வெங்கல் அருகே லாரிகளை சிறை பிடித்து மக்கள் போராட்டம்
லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்பட்டு, ஆவாஜிப்பேட்டை,மாளந்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது அன்றாட தேவைக்கு வெங்கல் பஜார் வீதிக்கு வந்து செல்வர். இவ்வாறு இக்கிராம மக்கள் வந்து செல்ல வெங்கல்-சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட பகுதி வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.
இந்நிலையில், இந்த சாலை ஒரு வழிச்சாலையாக உள்ளது. இதனால் ஒரு வாகனம் வரும்போது எதிர் திசையில் வரும் வாகனம் சாலையில் இருந்து இடது புறமாக இறங்க முடியாத அளவுக்கு மேடும், பள்ளமுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த சாலையில் மூன்று வாகன விபத்துக்கள் நடைபெற்றது. இந்நிலையில்,மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேம்பேடு மற்றும் மொண்ணவேடு உள்ளிட்ட பகுதிகளில் தனி நபர்களுக்கு சவுடு மண் அள்ள திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறை அதிகாரிகளும் அனுமதி வழங்கி உள்ளனர். இதனால் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கான லாரிகள் வெங்கல்-சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயா(வயது29) என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதனால் அவரை அவர்களது உறவினர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வெங்கல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது வெங்கல்-சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் கல்பட்டு கூட்டுச்சாலை அருகே சவுடு மண் ஏற்றிக்கொண்டு வெங்கல் நோக்கி சென்ற லாரி ஒன்று பழுதாகி நின்று விட்டது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஏற்றிக் கொண்டு சென்ற ஆட்டோவிற்கு எதிரே வந்த லாரிகள் வழிவிடாமல் அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காலதாமதம் ஏற்பட்டது. இதனை பார்த்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலர் சவுடு மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளையும்,சவுடு மண் ஏற்ற குவாரிக்கு சென்ற லாரிகளையும் தடுத்து நிறுத்தினர்.இதன் பின்னர், கிராம மக்கள் மற்றும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் வெங்கல் சிவசங்கர் ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஏற்றி வந்த ஆட்டோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் சாலையின் இருபுறமும் பல நூறு லாரிகள் அணிவகுத்து நின்றன.இது குறித்து தகவல் அறிந்த பெரியப்பாளையம் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இப்பிரச்சினையால் சுமார் 3 மணி நேரம் வெங்கல்-சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனை ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் இருபுறமும் உள்ள மெகா பள்ளத்திற்கு மண் கொட்டி சாலையை அகலப்படுத்த வேண்டும்.சாலை விபத்து ஏற்படாத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu