மதுரவாயலில் வாங்கிய கடனை கொடுக்காதவரை வீட்டைவிட்டு விரட்டிய வட்டிக்கடைக்காரர்

மதுரவாயலில் வாங்கிய கடனை கொடுக்காதவரை வீட்டைவிட்டு விரட்டிய வட்டிக்கடைக்காரர்
X

வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்தோணி சுரேஷ் மற்றும் அவரது குடும்பம். 

மதுரவாயல் பகுதியில் வாங்கிய கடனை கொடுக்காததால் வட்டிக்கடைக்காரர், வீட்டு சொந்தக்காரரை குடும்பத்துடன் வீட்டைவிட்டு அடித்து துரத்தினார்.

மதுரவாயல் கந்தசாமி நகர் பகுதியில் வாங்கிய கடனை கொடுக்காததால் ஒரு குடும்பத்தை அடித்துத் துரத்திய வட்டிக்கு பணம் கொடுத்தவர் மீது மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, குன்றத்தூரை அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி சுரேஷ். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரவாயல் பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் மிச்சர் கடை நடத்தி வரும் இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிகாமணி என்பவரிடம் சிறுகச்சிறுக ரூ. 22 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

இதற்கு சிகாமணி அவரிடம் வீட்டின் பத்திரத்தை பெற்றுக் கொண்டு கடன் வழங்கி உள்ளார். தற்போது அந்த கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.38 லட்சம் வருவதாகவும், அந்த கடனை கொடுக்காத காரணத்தால் வீட்டிற்குள் புகுந்து தங்களை வீட்டிலிருந்து அடித்து விரட்டி விட்டதாகவும், ரூ. 1 கோடி மதிப்பிலான வீட்டை தனக்கு விட்டுவிடும்படி மிரட்டி வருவதாகவும் அந்தோணி சுரேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் குடும்பத்துடன் வீட்டில் இருந்து வெளியேற்றிய சிகாமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தோணி சுரேஷ் புகார் அளித்துள்ளார். இது குறித்து மதுரவாயல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!