துணை செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் நாசர்

துணை செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் நாசர்
X
மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தும் அமைச்சர் நாசர்.
1.50 கோடி மதிப்பீட்டில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடங்களை திறந்து வைக்கப்பட்டதை முன்னிட்டு அமைச்சர் நாசர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஆய்வுக்கூடங்களை பார்வையிட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி பொது சுகாதார நிறுவனத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியின் 2-வது மற்றும் 3-வது தளங்களை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, அத்துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், அத்துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியில் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் அடங்கிய பெட்டகத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் வழங்கினார்.

செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பூவிருந்தவல்லி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 2020-2021-ம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1013 பெண் குழந்தைகள் பிறந்ததற்காக அம்மகப்பேர் மருத்துவ சேவையில் சிறப்பாக பணிபுரிந்த 13 கிராம மற்றும் நகர சுகாதார செவிலியர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். மேலும், அத்துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆய்வுக் கூடங்களையும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அமைக்கப்பட்ட விழிப்புணர்வு முகாமினையும் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் பரிசோதனை, இயற்கை உபாதககளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனைகளும் இங்கு வழங்கப்பட உள்ளது. இந்த அனைத்து வகையான பரிசோதனைகள் 736 தூய்மை பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை என சிறப்பு முகாம் அமைத்து நடத்தப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக ஆவடி காமராஜர் நகரில் உள்ள விளிஞ்சியம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார மையத்தில் 100 தூய்மை பணியாளர்களுக்கு நடைபெறும் மருத்துவ முகாமை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.

Tags

Next Story