ஒரு ஆஸ்பத்திரியின் பொறுப்புணர்வை பாருங்கள் : வளசரவாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகள்

ஒரு ஆஸ்பத்திரியின் பொறுப்புணர்வை    பாருங்கள் : வளசரவாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகள்
X
வளசரவாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வளசரவாக்கத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மருத்துவ கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொட்டியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.


வளசரவாக்கம், லட்சுமி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவ கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து கொட்டி விட்டு சென்றனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கொட்டும் மழையில் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கொரோனா தடுப்பு மருந்து காலி பாட்டில்கள் மற்றும் ஊசிகள், வார்டில் பயன்படுத்தப்படும் உடைகள் ஆகியவற்றை மொத்தமாக கொண்டு வந்து இந்த இடத்தில் கொட்டி விட்டு சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11வது மண்டல அதிகாரிகள், போலீசார் என அனைவரிடமும் புகார் தெரிவித்தும் இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அரசு அதிகாரிகளிடம் ஆன்லைன் வாயிலாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை தனிமைப்படுத்த அரசு அறிவித்தாலும் தற்போது பயன்படுத்திய மருத்துவ கழிவுகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து குடியிருப்புகளுக்கு மத்தியில் கொட்டியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவ கழிவுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என போலீசார் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொது மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கோவதே ஒரு உண்மையான ஆஸ்பத்திரியின் கடமையாக இருக்கும். ஆனால், இதைப்போல சமூக பொறுப்பு இல்லாமல் குடியிருப்புகளுக்கு மத்தியில் மருத்துவ கழிவுகளை கொட்டிய ஆஸ்பத்திரி எது என்று கண்டுபிடித்து அவர்களின் அங்கீகாரத்தையே ரத்து செய்ய வேண்டும்.அப்போதுதான் சமூக பொறுப்புடன் ஆஸ்பத்திரிகள் செயல்படும்.

பணம் பண்ணுவதே நோக்கமாக தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்படக்கூடாது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!