கல்லூரி மாணவி உயிரிழந்த வழக்கில் முதலமைச்சர் தலையிட பா.ஜ.க. வலியுறுத்தல்
மரணம் அடைந்த கல்லூரி மாணவியின் தாயாருக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆறுதல் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஹேமமாலினி கடந்த 13ஆம் தேதி வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் ஆசிரமத்திற்கு சென்ற போது அங்கு விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தொடர்ந்து மாணவி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 16ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தங்களது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் ஆசிரமத்தில் சாமியார் தங்களது மகளை பலி கொடுத்து விட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த கல்லூரி மாணவி ஹேமமாலினியின் குடும்பத்தினரை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரது குடும்பத்தினர் தங்களின் மகள் ஆசிரமத்திற்கு சென்றது, அங்கு தங்கி இருந்தது குறித்தும் வானதியிடம் கூறினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கைகள் குறித்து கேட்டிறிந்த வானதி சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று வந்த மாணவி ஹேமமாலினியின் தற்கொலை என்பது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார். மாணவி உயிரிழப்பில் ஆசிரம நிர்வாகி மீது பெற்றோர் சந்தேகம் தெரிவிக்கின்றனர் எனவும் மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார்.
காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற போது பிரச்சனை பெரிது படுத்த வேண்டாம் என ஆய்வாளர் கூறியுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டியதாகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதிலேயே காவல்துறை அலட்சியமாக செயல்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். காவல்துறை விசாரணையில் பெற்றோருக்கு திருப்தி இல்லை எனவும் நேர்மையாக விசாரணை நடத்த பி.ஜே.பி. சார்பில் முதலமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்றார்.
இந்த விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கும் பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தப்படும் என்றார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்றும் பெண்களின் பாதுகாப்பு, எதிர்காலம் என்பது அச்சமாக உள்ளது என குறிப்பிட்டார். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு குற்றம் இழைத்தவர் யாராக இருந்தாலும் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசாரணையில் திருப்திகரமாக இல்லையெனில் மாநில தலைவரிடம் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பா.ஜ.க. அறிவிக்கும் என்றார்.
அரியலூர் மாணவி லாவண்யா விவகாரத்தில் விசாரணையின் ஆரம்பத்திலேயே காவல்துறை மதமாற்றம் இல்லை என்றதால் பா.ஜ.க. சட்ட போராட்டத்தை முன்னெடுத்து வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு கொண்டு சென்றதாகவும், இந்த வழக்கின் விசாரணையை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu