முதலமைச்சர் உத்தரவை மீறி பூந்தமல்லியில் மீண்டும் முளைக்கும் பேனர் கலாச்சாரம்
பூந்தமல்லியில் மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாச்சாரம்; நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எம்எல்ஏ அலுவலகம் ஏற்கனவே இருந்தாலும் தற்போது பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்திலேயே புதிதாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற உள்ள நிலையில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தர உள்ளார்.
பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் மற்றும் பூந்தமல்லி ட்ரங்க் சாலை முழுவதும் திமுகவினர் ஏராளமான பேனர்களை வைத்துள்ளனர். பேனர்களை வைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேனர்களால் ஏற்படும் விபத்தில் பலர் இறந்து போயுள்ளனர். திமுக சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பேனர்கள் வைக்க வேண்டாம் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது அவரது உத்தரவை மீறும் வகையில் பூந்தமல்லி பகுதியில் போட்டி போட்டுக்கொண்டு ஏராளமான பேனர்களை வைத்துள்ளனர்.
வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய நகராட்சி அலுவலகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படுவதால் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வர முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu