முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிற்கு அரசு சார்பில் வீடு

ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவிற்கு வீடு கட்டும் பணியை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.
முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதிய வீடு கட்ட 3 செண்ட் நிலத்தில் அடிக்கல் நாட்டி கட்டிட பணியை துவக்கி வைத்தார் அமைச்சர் காந்தி.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த மோரை பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன்- செளபாக்கியா தம்பதியின் மகள் டான்யா முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு வீடு கட்டி தருவதாக தமிழக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியின் பேரில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட பாக்கம் கிராமத்தில் 3 செண்ட் நிலத்தை அவரது பேரில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வீடு கட்டுவதற்கான பணியை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, சட்ட மன்ற சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு. நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.
அதோடு ரூ. 10 லட்சத்தில் வீடு கட்ட திட்ட மதிப்பீடுகளை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டான்யா, தனக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இதுவரை தொடர்ந்து கண்காணித்து உதவி வரும் முதலமைச்சர், அமைச்சர் காந்தி, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு நன்றி என கூறினார்.
இதுகுறித்து பேசிய டான்யாவின் பெற்றோர், வாக்குறுதிகளை அளித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து உதவியை தமிழக முதல்வர் செய்து காட்டி வருவதாகவும், அதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu