மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!
சோழவரம் அருகே தெருவிளக்கு மின் கம்பத்தில் இன்சுலேட்டர் சரிந்து மின் கம்பி தெருவில் விழுந்ததில், மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.மின்வாரியத்தின் கவனக்குறைவாலே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே பூதூர் பகுதியை சேர்ந்தவர் கனகா( வயது 55).இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டமான 100 நாள் பணியாளராக இருந்து வந்துள்ளார்.
காலை வீட்டின் வெளியே வந்த போது, தெருவில மின் கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் அதனை மிதித்த போது, மின்சாரம் தாக்கியதில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலறிந்த அந்த பகுதி மக்கள், சோழவரம் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளித்ததின் பேரில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து சோழவரம் காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் கம்பத்தில் இன்சுலேட்டர் சரிந்து பீங்கான்கள் உடைந்து மின் கம்பி தெருவில் விழுந்துள்ளதால் மின் கம்பியை மிதித்த கனகா உயிரிழந்துள்ளதும், அவை பராமரிப்பு இன்றி இருந்ததும் தெரியவந்துள்ளது.மின் வாரியத்தின் அலட்சியத்தின் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாவும், தங்கள் பகுதியில் இது போன்று பொழுதடைந்த மின் கம்பிகள் அதிக அளவில் உள்ளதாகவும் இதனை சரி செய்து தருமாறு பலமுறை புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu