பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
X

தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

பொன்னேரி அருகே கழிவு நீரை கால்வாயில் கலப்பதாகக் கூறி கிராம மக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வாகனங்களுக்கு தேவையான உதிரி பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இத்தொழிற்சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அதன் கழிவுகள் சாலையில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஏலியம்பேடு கிராம மக்கள் ஒன்று கூடி திடீரென தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில் இரவு நேரங்களில் தொழிற்சாலையில் இருந்து அதிகபட்சமாக சத்தம் ஏற்பட்டு அளவில்லா அதிர்வலைகள் ஏற்படும் காரணத்தால் அன்றாட கூலி வேலைக்கு செல்லும் கிராம மக்கள் நிம்மதியாக உறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர்.

மேலும் ஏரிக்கு செல்லும் பொதுப்பணிக்கு சொந்தமான ஓடையை சேதப்படுத்தி கால்வாயை கட்டி தொழிற்சாலையிலிருந்து கழிவுநீரை வெளியேற்றி வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தொழிற்சாலைமீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒட்டுமொத்த கிராம மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் ஏன எச்சரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!