பொன்னேரி அருகே பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சாலை மறியல்: போலீசார் குவிப்பு
ஊரில் இருந்து வெளியே செல்பவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் காவல்துறையினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளியில் எல்என்டி கப்பல் கட்டும் தளம் இயங்கி வருகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இங்கு இருந்த மீனவ கிராம மக்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தி அவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டும் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் ஆகியும் இந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த 140 தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனர். மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு அப்புறப்படுத்திய கிராம மக்களுக்கு நிரந்தர வேலை வழங்காமல் தொழிற்சாலை இழுத்தடித்து வருவதை கண்டித்து மீனவ கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்காததால் இன்று சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருந்தனர்.
தொழிற்சாலை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தங்களது நிறுவனத்திற்கு வரும் தொழிலாளர்களையோ, ஆட்களையோ தடுத்து நிறுத்தாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் 200மீட்டர் சுற்றளவில் போராட்டம் நடத்தகூடாது என உத்தரவு வாங்கப்பட்டுள்ளதாக காவல்துறையும் கிராமத்தில் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர்.
இந்நிலையில் காட்டுப்பள்ளியில் உள்ள எல் & டி கப்பல் கட்டும் தளத்திற்கு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற 150க்கும் மேற்பட்ட மீனவர்களை காவல்துறையினர் கைது செய்து மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மேற்கொண்டு போராட்டம் நடத்தாமல் தடுக்க 300க்கும் மேற்பட்ட போலீசார் காட்டுப்பள்ளியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஊரில் இருந்து வெளியே செல்பவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்து பணிக்கு செல்கின்றனரா அல்லது போராட்டத்திற்கு செல்கின்றனரா அனுப்பி வருகின்றனர். தொழிற்சாலை தொடங்குவதற்கு முன் மீன், சங்கு, கிளிஞ்சல் என தங்களது தொழில் நன்றாக இருந்ததாகவும், தங்களுக்கு நிரந்தர வேலை அளிப்பதாக உறுதியளித்து 11 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருவதாகவும் பணிநிரந்தரம் செய்யாமல் இழுத்தடித்து வருவதாகவும் புகார் தெரிவித்தனர்.
ஊதிய உயர்வு, வாரிசு அடிப்படையில் வேலை என பல கோரிக்களை தொழிற்சாலை நிர்வாகம் நிறைவேற்றவில்லை என புகார் தெரிவித்தனர். பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் தொழிற்சாலை நிர்வாகமும், அரசும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என வேதனை தெரிவித்தனர்.
தங்களது உரிமைகளுக்காக போராட முயன்ற பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் காவல்துறை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu