பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
X

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றையிட்ட பொதுமக்கள். 

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை, வாக்காளர் அடையாள அட்டையுடன் முற்றுகையிட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சி, அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பேரூராட்சியில் 18வார்டுகளாக இருந்த நிலையில், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் வார்டு மறுவரையில் 27வார்டுகளாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், 2வது வார்டுக்குட்பட்ட வேதகிரி தெருவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், வாக்காளர் அடையாள அட்டையுடன் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது வார்டில் இருந்த சில குடியிருப்புகளை மட்டும் அருகில் உள்ள வார்டுடன் இணைத்துள்ளதாகவும், ஏற்கனவே இரு தரப்புக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் அருகில் உள்ள வார்டுடன் இணைக்க கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அவ்வாறு இணைத்தால் எதிர்வரும் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், நகராட்சி ஆணையர் தேன்மொழி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தற்போது வார்டு மறுவரையறை செய்யப்பட்டு புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் எதிர்ப்பு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக, நகராட்சி ஆணையர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!