அதானி துறைமுகம் விரிவாக்க கருத்து கேட்பு கூட்டம்

அதானி  துறைமுகம் விரிவாக்க கருத்து கேட்பு கூட்டம்
X

அதானி துறைமுகம் - கோப்புப்படம் 

காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் குறித்து செப்டம்பர் 5 மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து மக்கள் கருத்து கேட்டு கூட்டம் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது.

காட்டுப்பள்ளியில் உள்ள இந்த அதானி துறைமுகம், கடந்த ஏப்ரல்-15, 2008 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் பணிகள் துவக்கப்பட்டு, 3000 ஏக்கரில் 3068 கோடி முதலீட்டில் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் செயல்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்த துறைமுகம் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டது.

காட்டுப்பள்ளி துறைமுகம் ஆனது சரக்கு பெட்டக முனையம், கப்பல் கட்டும் தளம், கடல்சார் கட்டுருவாக்க வசதி, துறைமுக கிடங்குகள் என நான்கு துணை நிறுவனங்களைக் கொண்டது.

தற்போது வரை இந்தியாவில் 12 பெரிய துறைமுகம், 217 சிறிய துறைமுகங்கள் உள்ளன. இந்தியாவின் பொருளாதர வளர்ச்சிக்கும் உள்நாட்டு பொருட்கள் ஏற்றுமதிக்கும் வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதிக்கும் முதுகெலும்பாக இந்த துறைமுகங்கள் உள்ளது.

தற்போது காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகமானது 6,110 ஏக்கரில், 34 சூரிய மின்சக்தி திட்டங்களுடன், 320 மில்லியன் டன் சரக்குகளை கையாளக் கூடியதாகவும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டதும், இந்த துறைமுகமானது தென்னிந்தியாவிலேயே பிரம்மாண்டமான அதிநவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்ட துறைமுகமாக திகழும்.

இந்த துறைமுகமானது 320 மில்லியன் டன் சரக்குகளை கையாளக் கூடியதாகவும், 15000 புதிய வேலைவாய்ப்புகளை தரக்கூடியதாகவும் திகழும் என்பதால் தமிழகத்தின் அடையாளமாக இந்த துறைமுகம் மாற உள்ளதாக அதானி குழுமத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகள் பெரும்பாலும் நிலக்கரி மற்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த இருக்கும் என்பதால், தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை முழுமையாக தீர்வு அடைவதோடு, திருவள்ளூர் மாவட்டத்தில் பல புதிய தொழிற்சாலைகள் உருவாக காரணமாகவும் அமையும். மேலும் எட்டு வழி சாலைகள், புதிய ரயில் பாதைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் வடசென்னை பகுதியை தனித்த அடையாளமாக இந்த துறைமுகம் மாற்றும்.

53 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ள இந்த துறைமுக விரிவாக்கத்தால், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதியாக தமிழக மாற வாய்ப்பு உள்ளது எனவும், 20 ஆண்டுகளில் இந்த துறைமுகம் முழுமையாக செயல்படும் எனவும் அதானி குழுமத்தினர் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் இந்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தால் ஆபத்துகள் நிகழும் என சில மீனவ அமைப்புகளும் சில சமூக அமைப்புகளும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். துறைமுகத்தின் காரணமாக முகத்துவாரம் அடைபட்டு விட்டால் பெருவெள்ளம் ஏற்படும், மீன்பிடி வாழ்வுரிமை பாதிக்கப்படும், பிற நாட்டு போர்க்கப்பல்கள் பழுது நீக்கம் பார்க்கப்படும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஆனால் மீனவர்களின் மீன் பகுதியில் எந்த வித மாற்றமும் இருக்காது என்றும், மீனவர்களின் வாழ்வாதாரப் பகுதி அப்படியே இருக்கும் என்றும் அதானி குழுமத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பழவேற்காடு சுற்றுவட்டார மீனவ பகுதி படித்த இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகள் அமைத்து தருவது, திறன் வளர் மையங்களை அமைத்து புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்குவது, கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைத்து தருவது, நிரந்தர முகத்துவாரம் போன்ற கோரிக்கைகள் பொதுமக்கள் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்த கருத்து கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பழவேற்காடு பகுதியில் மக்கள் தொகை அதிகம் கொண்ட அரங்கங்குப்பம், கூனங் குப்பம்,சாட்டான் குப்பம் ஆகிய பகுதி மீனவ மக்கள் நிலைப்பாடு ,இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் மீனவர்களுக்கு இந்த துறைமுகத்தால் எவ்வித இடையூரும் இருக்காது என்பதை தமிழக அரசும் மீனவர்களுக்கு உறுதி அளிக்கவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!